search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பத்தூர் பெண் சினேகா"

    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டரில் சாதி, மதம் அற்றவர் என சான்று பெற்ற வழக்கறிஞர் சினேகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். #KamalHaasan #NoCasteNoReligion
    சென்னை:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன் பேட்டையை சேர்ந்தவர் சினேகா. வழக்கறிஞரான இவர் ‘சாதி, மதம் அற்றவர்’ என்கிற சான்றிதழை போராடி பெற்று இருக்கிறார்.

    கடந்த 2017-ம் ஆண்டு சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்குமாறு விண்ணப்பித்திருந்தார். பல்வேறு விசாரணைக்கு பின்னர் அவருக்கு திருப்பத்தூர் சார்-ஆட்சியாளர் பிரியங்கா பங்கஜம் பரிந்துரையின் பேரில் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, ‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழை வழங்கினார்.

    இது குறித்து சினேகா கூறும்போது, “பள்ளியில் முதல் வகுப்பு சேர்க்கையின் போது என்ன சாதி என்று கேட்டனர். அப்போது எனக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை என்று பெற்றோர் கூறினர்.

    பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் சாதி, மதம் குறிப்பிட்டதில்லை. இந்தியர் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கும். எனது சகோதரிகள் இருவரின் பிறப்பு சான்றிதழ், பள்ளி- கல்லூரி சான்றிதழ்களிலும் இந்தியர் என்று மட்டுமே குறிப்பிட்டு இருக்கும்” என்றார்.

    இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படி ஒரு சான்றிதழ் வாங்கி இருப்பதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. ‘சாதிய அமைப்பிற்கு அடையாளமாக சாதி சான்றிதழ் இருப்பதை போல சாதி,மதம் அற்றவர்களின் வாழ்விற்கு ஒரு அடையாளமாக இந்த சான்று அமைந்திருப்பதாகவும், என்ன சாதி என்று சொல்வதற்கே உரிமை இருக்கும் நிலையில், சாதி இல்லை, மதம் இல்லை என்று சொல்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்கிறாய்’ என்றும் பல்வேறு தரப்பிலிருந்து சினேகாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.



    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டரில் வழக்கறிஞர் சினேகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். ‘தமிழ் மகள் சினேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மதம் மாறுவதைவிட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா... புதுயுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம்பிடிப்போர்க்கு இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே. நிச்சயம் நமதே’’ என்று கமல்ஹாசன் ‘டுவீட்’ செய்துள்ளார். #KamalHaasan #NoCasteNoReligion
    ×